அசைக்கவே முடியாத அரசன் ‘ஆண்ட்ராய்டு’-10 ஆண்டுகாலப் பயணம்!

அசைக்கவே முடியாத அரசன் ‘ஆண்ட்ராய்டு’-10 ஆண்டுகாலப் பயணம்!

September 27, 2018 0 By admin

ஜூன் 29, 2007 ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபோனை அறிமுகப்படுத்திய தினம். இன்றைக்கு இருக்கும் ஸ்மார்ட்போன்களுக்கான விதை அன்றுதான் விதைக்கப்பட்டது. மொபைலில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தியிருந்தது ஆப்பிள். அன்றைக்கு உலகம் வேண்டுமானால் ஐபோனை ஆச்சர்யத்துடன் பார்த்திருக்கலாம். ஆனால், கூகுளும் மற்ற மொபைல் நிறுவனங்களும் அதிர்ந்து போய் நின்ற தருணம் அது. அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்றை ஆப்பிள் செய்திருந்தது. அவர்களுக்கு எதன் மூலமாக வருமானம் வந்து கொண்டிருந்ததோ அதில் நேரடியாகவே ஆப்பிள் கை வைத்துவிட்டது என்ற கவலை மொபைல் நிறுவனங்களுக்கு; ஆப்பிள் அடுத்த கட்டத்துக்கு வளர்ந்துவிட்டதே என்ற கவலை கூகுளுக்கு. அப்பொழுது அவர்களுக்குத் தேவையாக இருந்தது ஐபோனுக்கு மாற்றாக, அதே சமயத்தில் அதனுடன் போட்டி போடக்கூடிய வகையிலான ஒரு சாதனம். மொபைல் நிறுவனங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தன. ஐபோனுக்குப் போட்டியாக ஒரு சாதனத்தை உருவாக்க வேண்டும். அதுவும் மிகக் குறுகிய காலத்துக்குள்; இல்லையென்றால் மொபைல் சந்தையை ஆப்பிளிடம் விட்டுக்கொடுத்து விட வேண்டியதுதான்.

அன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு மொபைல் நிறுவனமும் தனித்தனி இயங்குதளங்களைப் பயன்படுத்தின. மொபைல் நிறுவனங்களிடம் ஹார்டுவேர் வசதிக்குப் பஞ்சமில்லை. சரியான இயங்குதளம்தான் தேவையாக இருந்தது. அந்த வெற்றிடத்தைப் போக்க நினைத்தது கூகுள், களத்தில் இறங்கியது. அவ்வளவு தைரியமாக களத்தில் இறங்கியதற்குக் காரணம், கூகுளிடம் ஓர் ஆயுதம் இருந்தது. 2005-ம் ஆண்டில் ஆண்டி ரூபினிடம்(ANDY RUBIN) இருந்த வாங்கிய அதைப் பட்டை தீட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. அந்த ஆயுதத்தின் பெயர் ஆண்ட்ராய்டு. HTC நிறுவனத்துடன் கைகோத்தது கூகுள், வேலைகள் முடுக்கிவிடப்பட்டன. ஐபோன் அறிமுகமாகிக் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து அறிமுகப்படுத்தப்பட்டது உலகின் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனான T-Mobile G1. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம் என்பதற்குச் சரியான உதாரணம் ஆண்ட்ராய்டுதான். செப்டம்பர் 23-ம் தேதியோடு தன் பத்தாண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது ஆண்ட்ராய்டு.

T-Mobile G1 ஸ்மார்ட்போனை HTC நிறுவனம் உருவாக்கியிருந்தது. அமெரிக்கா தவிர்த்து பிற நாடுகளில் HTC Dream என்ற பெயரில் விற்பனைக்கு வந்தது. அன்றைக்குப் பிரபலமாக இருந்த வடிவமைப்புகள் ஒட்டுமொத்தமாக இணைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டிருந்தது முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன். குறிப்பாக ப்ளாக்பெரியின் அடையாளமாகக் கருதப்பட்ட QWERTY கீபோர்டு, ஸ்லைடு வடிவமைப்பு எனப் பல்வேறு வசதிகள் இதில் இருந்தன. இந்த ஸ்மார்ட்போனுக்கு சந்தையில் கிடைத்த வெற்றியைப் பார்த்து மற்ற மொபைல் நிறுவனங்களுக்கும் ஆண்ட்ராய்டின் மீது நம்பிக்கை வந்தது. சாம்சங், சோனி எரிக்ஸன், எல்ஜி எனப் பல்வேறு முன்னணி மொபைல் நிறுவனங்களும் ஆண்ட்ராய்டைப் பயன்படுத்தத் தொடங்கின.

Thanks -vikatan