அமெரிக்காவில் பயில ரூ.4 கோடி கல்வி உதவித்தொகை பெற்ற டீ கடைக்காரர் மகள்

June 22, 2018 0 By admin

உத்தரப் பிரதேசம், புலந்த்சாஹர் மாவட்டத்தில், டீக்கடை நடத்துபவரின் மகள் 12-ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்றதையடுத்து, அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பயில ரூ.4 கோடி உதவித்தொகை பெற்றுள்ளார்

உத்தரப் பிரதேசம், புலந்த்சாஹர் மாவட்டம், தூம்மணிக்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதிக்சா பாட்டியா (வயது17). இவரின் தந்தை கிராமத்தில் சொந்தமாக டீக்கடை நடத்தி வருகிறார். ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் மட்டுமே வருவாய் வருவதால், அதை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், 2009-ம் ஆண்டு சுதிக்சாவின் தந்தைக்குத் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், 5-ம் வகுப்புவரை மெட்ரிக் தொடக்கப்பள்ளியில் படித்த சுதிக்சாவை அரசுப் பள்ளிக்கு மாற்றினார். அதன்பின் அங்குள்ள புலந்தசாஹர் மாவட்டத்தில் உள்ள ஜவஹர் நவோதயா பள்ளியில் நுழைவுத்தேர்வு எழுதி சுதிக்சா சேர்ந்தார்.

அங்கு படித்து வரும் போது,கடந்த 2011-ம் ஆண்டு, வித்யாஞான் அகாடமி சார்பில் நடத்தப்பட்ட தேர்வில் முதலிடம் பெற்று 12-ம் வகுப்பு வரை இலவசமாகப் படிக்கும் திட்டத்தில் சுதிக்சா இடம் பெற்றார்.

இதில் வித்யாஞான் அகாடமி என்பது தமிழகத்தைச் சேர்ந்த சிவநாடார் பவுண்டேஷன் சார்பில் நடத்தப்படும் அமைப்பாகும். உ.பி.யில் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி கற்க உதவி அளித்து வரும் அமைப்பாகும். இங்கு 12-ம் வகுப்பு வரை படித்தார். சமீபத்தில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியானதில் சுதிக்சா 98 சதவீத மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றார்.

இதையடுத்து, வித்யாஞான் அகாடமி மூலம் அமெரிக்காவின் மாசாசூட்டஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற பாப்சன் கல்லூரியில் சேர்ந்து பயில ரூ.3.83 கோடி உதவித்தொகையுடன் இடம் கிடைத்துள்ளது. அமெரிக்காவிலேயே தொழில்முனைவோர்களுக்கு சிறந்த கல்லூரியாகக் கருதப்படும் பாப்சன் கல்லூரியில் இணைந்து 4ஆண்டுகள் உதவித்தொகையுடன் சுதிக்சா படிக்க உள்ளார். தற்போது அமெரிக்க விசாவுக்காக சுதிக்சா காத்திருக்கிறார்.

                                                                         சுதிக்சா பாட்டியா

இது குறித்து சுதிக்சா நிருபர்களிடம் கூறுகையில், ”எனக்கு 9 வயது இருக்கும் போது, பள்ளியில் கட்டணம் செலுத்த முடியாமல் வீட்டுக்கு அனுப்பப்பட்டேன். அதன்பின், நவோதயா பள்ளியில் சேர்ந்து உதவித்தொகையுடன் படித்தேன். அதன்பின் நடந்த தகுதித்தேர்வில் தேர்வாகி இப்போது அமெரிக்கா செல்ல இருக்கிறேன். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு எனது உறவினர்களும், நண்பர்களும் உதவ முன்வரவில்லை. அதன்பின் எனது கடின உழைப்பு, முன்னேற வேண்டும் என்ற துடிப்பு, அகாடமி அளித்த உதவியால்தான் எனக்குக் கல்வி பயில அமெரிக்காவில் இடம் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்தார்.