ஓட்டுநர் உரிமத்தை ஆதார் எண்ணுடன் இணைக்க மத்தியரசு தீவிரம்

June 15, 2018 0 By admin
போக்குவரத்து துறையில் அதிகரிக்கும் குற்றங்கள் மற்றும் குழப்பங்களை தீர்க்க வாகன ஓட்டுநர் உரிமத்துடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு தீவர ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்தியாவில் சாலை பயன்பாட்டில் விபத்துக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதை குறைக்க மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு இணைந்து கடுமையான போக்குவரத்து விதிகளை நடைமுறைப்படுத்தியுள்ளன.

இருப்பினும், விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. போக்குவரத்து விதிகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அதை மீறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

குறிப்பாக சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, டெல்லி போன்ற பெருநகரங்களில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கை ஏறுமுகத்தில் தான் உள்ளது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் பெரிய கவலையை அளிப்பதாக உள்ளன.

சாலை விபத்துக்கள் தொடர்பாக துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குற்றம் சுமத்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டாலும், போலி ஆவணங்களை காட்டி வழக்கிலிருந்து குற்றவாளிகள் தப்பிப்பது தொடர் கதையாக உள்ளது.

இதை தடுக்கும் நோக்கில் இந்தியாவில் உள்ள எல்லா வாகன ஓட்டிகளும் ஓட்டுநர் உரிமத்தை ஆதார் எண்ணுடன் இணைக்கும் நடைமுறையை பற்றி மத்தியரசு ஆலோசித்து வருகிறது.

சமீபத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி இருவரும் இதுப்பற்றி ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இதனால் விரைவிலேயே ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமம் இணைக்கப்படுவது தொடர்பான அரசாணையை மத்தியரசு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த நடைமுறைக்கு கால அவகாசம் மற்றும் இணைக்கு முறை பற்றி மத்திய அரசு விளக்கமளிக்கவில்லை.