நதிகள் இணைப்புத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்-EPS

June 18, 2018 0 By admin

நதிகள் இணைப்புத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி பேசினார். தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழுவின் 4-வது கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடந்தது. இதில், உறுப்பினர்களாக உள்ள அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள், சில மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசுகையில் ‘‘நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2017-18-ம் நிதி ஆண்டின் கடைசி காலிறுதிவரை 7.7 சதவீதம் என்ற ஆரோக்கியமான நிலையில் இருந்து வருகிறது. இப்போது நாட்டின்முன் இருக்கும் முக்கிய சவால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கத்தில் உயர்த்துவதுதான். அதற்கான முயற்சிகளில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது’’ எனக் கூறினார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி பேசுகையில் ‘‘தமிழகத்தின் பல பகுதிகள் காவிரி தண்ணீரை நம்பியே உள்ளன. எனவே மாநிலங்களக்கு இடையிலான நதிகளை இணைக்க வேண்டும். மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பாலாறு காவிரி, வைகை, குண்டாறு நதிகளை இணைக்க வேண்டும். நதிகள் இணைப்பு திட்டத்தை உடனடியாக மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் உபரி நீர் வீணாவததை தடுக்க முடியும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இதனை வலியுறுத்தி வந்துள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையம் தனது பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் பின்பற்றப்பட வேண்டும். நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் நீர்மேலாண்மை, குடிமராமத்து பணிக்கு தேவையான நிதி வழங்க வேண்டும். மதுரை காந்தி அருங்காட்சியகத்துக்கு ரூ 10 கோடி நிதி வழங்க வேண்டும். ராமநாதபுரம், விருதுநகரில் மருத்துவக்கல்லூரி தொடங்க மத்திய அரசு உதவ வேண்டும்’’ என பேசினார்.